Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, April 8, 2023

ஏப்ரல் 8 : பாஸ்கா திருவிழிப்புமூன்றாம் வாசகம்இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 14: 15- 15: 1

ஏப்ரல் 8 :  பாஸ்கா திருவிழிப்பு

மூன்றாம் வாசகம்

இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 14: 15- 15: 1
அந்நாள்களில்

ஆண்டவர் மோசேயை நோக்கி, “ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள். நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன். பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, ‘நானே ஆண்டவர்’ என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்” என்றார்.

இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் அவர்களுக்குப் பின் வந்து நின்றார். மேகத்தூணும் இடம்பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்றுகொண்டது. அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது; இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை.

மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது. வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க, இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல் வரை சென்றனர். பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார். அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், “இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்றுவிடுவோம். ஏனெனில், ஆண்டவர் தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்” என்றனர்.

ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள், குதிரை வீரர் அனைவர் மேலும் திரும்பி வரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு” என்றார். மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பி வந்தது. அதற்கு எதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார். திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரை வீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன்கூடத் தப்பவில்லை. ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது.

இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலை அளித்தார்.

கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர். எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர்.

அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்தேத்திப் பாடிய பாடல் வருமாறு:

பதிலுரைப் பாடல்

விப 15: 1-2. 3-4. 5-6. 17-18 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில் மாட்சியுடன் வெற்றி பெற்றார்.

1
ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றி பெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.
2
ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன். - பல்லவி

3
போரில் வல்லவர் ஆண்டவர்; ‘ஆண்டவர்’ என்பது அவர் பெயராம்.
4
பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார்; அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர். - பல்லவி

5
ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்; ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன.
6
ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது; ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது. - பல்லவி

17
ஆண்டவரே, எம் தலைவரே! நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும், உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள உம் உரிமைச் சொத்தான மலைக்கு அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர்.
18
ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார். - பல்லவி

No comments:

Post a Comment