மே 18 : முதல் வாசகம்
கொரிந்து நகரில் பவுல் வேலை செய்துவந்தார். ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக்கூடத்தில் பேசினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 1-8
அந்நாள்களில்
பவுல் ஏதென்சை விட்டு கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே போந்துப் பகுதியில் பிறந்த அக்கிலா என்னும் பெயருடைய ஒரு யூதரையும் அவர் மனைவி பிரிஸ்கில்லாவையும் கண்டு அவர்களிடம் சென்றார். அவர்கள், “யூதர் அனைவரும் உரோமை நகரத்தை விட்டு வெளியேற வேண்டும்” என்ற கிலவுதியு பேரரசருடைய கட்டளைக்கு இணங்கி இத்தாலிய நாட்டைவிட்டு அண்மையில் அங்கு வந்திருந்தார்கள். கூடாரம் செய்வது அவர்களது தொழில். தாமும் அதே தொழிலைச் செய்பவராதலால் பவுல் அவர்களிடம் தங்கி வேலை செய்துவந்தார். ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக் கூடத்தில் யூதரிடமும் கிரேக்கரிடமும் பேசி அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்தார்.
சீலாவும் திமொத்தேயுவும் மாசிதோனியாவிலிருந்து வந்தபோது பவுல் இறைவாக்கை அறிவிப்பதில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தார்; ‘இயேசுவே மெசியா’ என்று யூதரிடம் சான்று பகர்ந்துவந்தார். அவர்கள் அதனை எதிர்த்துப் பழித்துரைத்தபோது அவர் தமது மேலுடையிலிருந்த தூசியை உதறி, “உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு, நான் அல்ல. இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கிறேன்” என்று கூறினார்;
அவ்விடத்தை விட்டுவிட்டுக் கடவுளை வழிபடும் தீத்துயுஸ்து என்னும் பெயருடைய ஒருவரின் வீட்டுக்குப் போனார். அவரது வீடு தொழுகைக்கூடத்தை அடுத்து இருந்தது. தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர் தம் வீட்டார் அனைவரோடும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார். கொரிந்தியருள் பலரும் பவுல் கூறியவற்றைக் கேட்டு நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெற்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment