மே 21 : இரண்டாம் வாசகம்
அவரை விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-23
சகோதரர் சகோதரிகளே,
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக!
கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்ப வர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப்பெறுவனவாக! கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலைக் கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்; இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்.
அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 28: 19-20
அல்லேலூயா, அல்லேலூயா!
நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
No comments:
Post a Comment