மே 25 : முதல் வாசகம்
உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22: 30; 23: 6-11
அந்நாள்களில்
யூதர்கள் பவுல்மீது என்ன குற்றம் சுமத்துகிறார்கள் என்பதை உறுதியாக அறிய ஆயிரத்தவர் தலைவர் விரும்பினார். எனவே மறுநாள் தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு அவர் ஆணை பிறப்பித்துப் பவுலைச் சிறையிலிருந்து கொண்டுவந்து அவர்கள் முன் நிறுத்தினார்.
அவர்களுள் ஒரு பகுதியினர் சதுசேயர் என்றும், மறு பகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து, “சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்; இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன்” என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார்.
அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர். சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறிவந்தனர்; பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக்கொண்டனர். அங்குப் பெருங்கூச்சல் எழுந்தது. பரிசேயப் பிரிவினைச் சேர்ந்த மறைநூல் அறிஞருள் சிலர் எழுந்து, “இவரிடம் தவறொன்றையும் காணோமே! வானதூதர் ஒருவரோ, ஓர் ஆவியோ இவரோடு பேசியிருக்கலாம் அல்லவா!” என வாதாடினர்.
வாக்குவாதம் முற்றவே அவர்கள் பவுலைப் பிய்த்தெறிந்துவிடுவர் என ஆயிரத்தவர் தலைவர் அஞ்சிப் படைவீரரை வரச்சொல்லி அவரை அவர்கள் நடுவிலிருந்து பிடித்துக் கோட்டைக்குள் கூட்டிக்கொண்டு செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்.
மறுநாள் இரவு ஆண்டவர் அவரருகில் நின்று, “துணிவோடிரும்; எருசலேமில் என்னைப்பற்றிச் சான்று பகர்ந்ததுபோல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment