ஜூன் 16 : இயேசுவின் திருஇதயம் பெருவிழா
முதல் வாசகம்
ஆண்டவர் உங்கள்மீது அன்புகூர்ந்தார்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 7: 6-11
உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள். மண்ணிலுள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாகக் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டார். எல்லா மக்களிலும் நீங்கள் திரளானவர்கள் என்பதற்காக ஆண்டவர் உங்கள்மீது அன்பு கொண்டு உங்களைத் தேர்ந்து கொள்ளவில்லை. உண்மையில், எல்லா மக்களிலும் நீங்கள் சொற்பமானவர்களே! மாறாக, உங்களிடம் அன்புகூர்ந்ததனாலும், உங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பொருட்டும், ஆண்டவர் தமது வலிமைமிகு கரத்தால் உங்களைப் புறப்படச் செய்து, அடிமைத்தன வீட்டினின்றும் எகிப்து மன்னனாகிய பார்வோனின் கையினின்றும் உங்களை விடுவித்தார். எனவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவரே கடவுள் எனவும், அவரே உண்மையான இறைவன் எனவும் அறிந்துகொள்ளுங்கள். அவர்மீது அன்புகூர்வோருக்கும் அவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போருக்கும் ஆயிரம் தலைமுறைவரைக்கும் தம் இரக்கத்தின் உடன்படிக்கையைக் காக்கின்றவர் அவரே! ஆனால், அவரைப் பகைப்பவரை அழிப்பதன் மூலம் நேரடியாகப் பதிலளிப்பார்; அவரை வெறுப்பவரை நேரடியாகத் தண்டிப்பதற்கும் காலம் தாழ்த்த மாட்டார். எனவே நீங்கள் கடைப்பிடிக்கும்படி நான் உங்களுக்கு இன்று இடும் கட்டளைகளையும், நியமங்களையும் முறைமைகளையும் நிறைவேற்றுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment