ஜூன் 5 : முதல் வாசகம்
தோபித்து அரசனை விட, கடவுளுக்கு அஞ்சினார்.
தோபித்து நூலிலிருந்து வாசகம் 1: 1a, 2-3a; 2: 1c-8
தோபித்து தொபியேலின் மகன்; தோபித்து அசீரியர்களின் மன்னரான எனமேசரின் காலத்தில் திசிபேயிலிருந்து நாடு கடத்தப்பட்டார். தோபித்தாகிய நான் என் வாழ்நாளெல்லாம் உண்மையையும் நீதியையும் பின்பற்றி வாழ்ந்து வந்தேன்.
வாரங்களின் விழாவான பெந்தெகோஸ்து திருவிழாவின்பொழுது எனக்காக நல்லதொரு விருந்து தயாரிக்கப்பட்டது. நான் உணவு அருந்த அமர்ந்தேன். விருந்தின்போது எனக்குப் பலவகை உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது என் மகன் தோபியாவிடம், “பிள்ளாய், நீ போய், நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட நம் உறவின் முறையாருள் கடவுளை முழு மனத்தோடு தேடும் ஏழை எவரையேனும் கண்டால், அவரை அழைத்து வா; அவர் என்னோடு உணவு அருந்தட்டும். நீ திரும்பி வரும் வரை நான் உனக்காகக் காத்திருப்பேன், மகனே” என்று கூறினேன். தோபியா எங்கள் உறவின் முறையாருள் ஏழை ஒருவரைத் தேடிச் சென்றான். அவன் திரும்பி வந்து, “அப்பா” என்று அழைத்தான். நான், “என்ன மகனே?” என்றேன். அவன் மறுமொழியாக, “அப்பா, நம் இனத்தாருள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் சந்தை வெளியில் எறியப்பட்டு அங்கேயே கிடக்கிறது” என்றான். உடனே நான் எழுந்து, உணவைத் தொடாமலே வெளியேறி, தெருவிலிருந்து சடலத்தைத் தூக்கி வந்தேன்; கதிரவன் மறைந்த பின் அடக்கம் செய்யலாம் என்று அதை என் வீட்டின் ஓர் அறையில் வைத்தேன். வீடு திரும்பியதும் குளித்துவிட்டுத் துயருடன் உணவு அருந்தினேன். “உங்கள் திருநாள்களைத் துயர நாள்களாகவும் பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்” என்று பெத்தேலைக் குறித்து இறைவாக்கினர் ஆமோஸ் கூறிய சொற்களை நினைத்து அழுதேன்.
கதிரவன் மறைந்ததும் நான் வெளியே சென்று, குழி தோண்டிச் சடலத்தைப் புதைத்தேன். என் அண்டை வீட்டார், “இவனுக்கு அச்சமே இல்லையா? இத்தகையதொரு செயலைச் செய்ததற்காகத்தானே ஏற்கெனவே இவனைக் கொல்லத் தேடினார்கள். இவனும் தப்பியோடினான். இருப்பினும் இறந்தவர்களை மீண்டும் அடக்கம் செய்கின்றானே” என்று இழித்துரைத்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment