ஜூலை 26 : முதல் வாசகம்
நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 16: 1-5, 9-15
அந்நாள்களில்
இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பினர் அனைவரும் ஏலிமிலிருந்து புறப்பட்டு ஏலிம், சீனாய் இவற்றிற்கு இடையேயுள்ள சீன் பாலைநிலத்தை வந்தடைந்தனர். இவர்கள் எகிப்து நாட்டினின்று வெளியேறி வந்த இரண்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அது.
இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, “இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றனர்.
அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக் கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன். ஆனால் ஆறாம் நாளில், நாள்தோறும் அவர்கள் சேகரித்து வந்ததைவிட இருமடங்கு சேகரித்துத் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
மோசே ஆரோனிடம், “நீர் இஸ்ரயேல், மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கி: ஆண்டவர் திருமுன் அணுகிச் செல்லுங்கள்; ஏனெனில் அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டுள்ளார் என்று சொல்லும்” என்றார். அவ்வாறே ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கிப் பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் பாலை நிலப்பக்கமாய்த் திரும்பினார்கள். அப்போது ஆண்டவரின் மாட்சி மேகத்தில் தோன்றியது.
ஆண்டவர் மோசேயை நோக்கி, “இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், ‘மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்’ என்று சொல்” என்றார்.
மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப் படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது. பனிப் படலம் மறைந்தபோது பாலை நிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது. இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி ‘மன்னா’ என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
அப்போது மோசே அவர்களை நோக்கி, “ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment