அக்டோபர் 1 : இரண்டாம் வாசகம்
கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-11
சகோதரர் சகோதரிகளே,
கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.
கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுமே அறிக்கையிடும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா!
என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
No comments:
Post a Comment