அக்டோபர் 12 : முதல் வாசகம்
இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது.
இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 13- 4: 2a
“எனக்கு எதிராக நீங்கள் கடுஞ்சொற்களை உதிர்த்து வந்தீர்கள்,” என்கிறார் ஆண்டவர். ஆயினும், “உமக்கு எதிராக என்ன பேசினோம்?” என்று கேட்கிறீர்கள். கடவுளுக்கு ஊழியம் செய்வது வீண்; அவரது திருமுறைகளைக் கடைபிடித்து ஒழுகுவதாலும் படைகளின் ஆண்டவர் திருமுன் மனம் வருந்தி நடந்து கொள்வதாலும் நமக்கு என்ன பயன்? இனிமேல் நாங்கள், ‘ஆணவக்காரரே பேறுபெற்றோர்’ என்போம். கொடியோர் தழைத்தோங்குவது மட்டுமல்ல, கடவுளை அவர்கள் சோதித்துப் பார்த்தாலும், தப்பித்துக் கொள்ளுகிறார்கள் என்றெல்லாம் நீங்கள் கூறவில்லையா?"
அப்போது, ஆண்டவருக்கு அஞ்சி நடந்தோர் ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டனர். ஆண்டவரும் உன்னிப்பாகக் கேட்டார். ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவரது பெயரை நினைந்து வாழ்வோருக்கென நினைவு நூல் ஒன்று அவர் திருமுன் எழுதப்பட்டது. “நான் செயலாற்றும் அந்நாளில் அவர்கள் எனது தனிப்பெரும் சொத்தாக இருப்பார்கள்” என்கிறார் படைகளின் ஆண்டவர். ஒரு தந்தை தமக்குப் பணிவிடை செய்யும் மகன்மீது கருணை காட்டுவது போல் நான் அவர்கள் மீது கருணை காட்டுவேன். அப்போது நீங்கள் நேர்மையாளர்க்கும் கொடியோர்க்கும், கடவுளுக்கு ஊழியம் செய்வோர்க்கும் அவருக்கு ஊழியம் செய்யாதோர்க்கும் உள்ள வேற்றுமையை மீண்டும் கண்டுகொள்வீர்கள்.
“இதோ! சூளையைப் போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும்அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது; முற்றிலும் சுட்டெரித்துவிடும்,” என்கிறார் படைகளின் ஆண்டவர். “ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment