நவம்பர் 11 : முதல் வாசகம்
தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 16: 3-9, 16, 22-27
சகோதரர் சகோதரிகளே,
கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சேர்ந்து உழைக்கின்ற பிரிஸ்காவுக்கும் அக்கிலாவுக்கும் என் வாழ்த்து. அவர்கள் என் உயிரைக் காக்கத் தலைகொடுக்கவும் முன்வந்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மட்டும் அல்ல, பிற இனத்துத் திருச்சபைகள் அனைத்துமே நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன. அவர்கள் வீட்டில் கூடும் திருச்சபைக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.
என் அன்பார்ந்த எப்பைனத்துக்கும் வாழ்த்துக் கூறுங்கள். ஆசியாவில் கிறிஸ்துவை முதன்முதல் ஏற்றுக்கொண்டவர் இவரே. உங்களுக்காக பாடுபட்டு உழைத்த மரியாவுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள். என் உறவினர்களும் உடன் கைதிகளுமான அந்திரோனிக்கு, யூனியா ஆகியவர்களுக்கும் என் வாழ்த்துகள்; திருத்தூதர்களுள் இவர்கள் பெயர் பெற்றவர்கள்; இவர்கள் எனக்குமுன் கிறிஸ்தவர்கள் ஆனார்கள். ஆண்டவருக்கு உரியவரான என் அன்பார்ந்த அம்பிலியாத்துக்கு வாழ்த்துகள். கிறிஸ்துவுக்காக உழைக்கும் என் உடன் உழைப்பாளரான உர்பானுக்கும் என் அன்பார்ந்த ஸ்தாக்கிக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.
தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் எல்லாச் சபைகளும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றன.
இந்தத் திருமுகத்தை எழுதிக் கொடுத்த தெர்த்தியுவாகிய நான் ஆண்டவருக்கு உரியவன் என்னும் முறையில் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறேன். நான் தங்குவதற்கும் சபையினர் அனைவரும் ஒன்று கூடுவதற்கும் தம் வீட்டில் இடமளிக்கிற காயு உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார். நகரத்தின் பொருளாளரான எரஸ்தும் நம் சகோதரனாகிய குவர்த்தும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.
இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment