நவம்பர் 16 : முதல் வாசகம்
ஞானம் - என்றுமுள்ள ஒளியின் சுடர்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 22- 8: 1
ஞானம் ஆற்றல் கொண்டது. அவ்வாற்றல் அறிவுடையது; தூய்மையானது; தனித்தன்மை வாய்ந்தது; பலவகைப்பட்டது; நுண்மையானது; உயிரோட்டம் உள்ளது; தெளிவுமிக்கது; மாசுபடாதது; வெளிப்படையானது; கேடுறாதது; நன்மையை விரும்புவது; கூர்மையானது. ஞானம் - எதிர்க்க முடியாதது; நன்மை செய்வது; மனித நேயம் கொண்டது; நிலைபெயராதது; உறுதியானது; வீண்கவலை கொள்ளாதது; எல்லாம் வல்லது; எல்லாவற்றையும் பார்வையிடுவது; அறிவும் தூய்மையும் நுண்மையும் கொண்ட எல்லா உள்ளங்களையும் ஊடுருவிச் செல்வது.
ஞானம் - அசைவுகள் எல்லாவற்றையும் விட மிக விரைவானது. அதன் தூய்மையினால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது. எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது. ஞானம் - கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி; எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து எழும் தூய வெளிப்பாடு. எனவே மாசுபட்டது எதுவும் அதனுள் நுழைய முடியாது. ஞானம் - என்றுமுள ஒளியின் சுடர்; கடவுளது செயல்திறனின் கறைபடியாக் கண்ணாடி; அவருடைய நன்மையின் சாயல்.
ஞானம் - ஒன்றே என்றாலும், எல்லாம் செய்ய வல்லது; தான் மாறாது, அனைத்தையும் புதுப்பிக்கிறது; தலைமுறைதோறும் தூய ஆன்மாக்களில் நுழைகிறது; அவர்களைக் கடவுளின் நண்பர்கள் எனவும் இறைவாக்கினர்கள் எனவும் ஆக்குகிறது.
ஞானத்தோடு வாழ்கின்றவர்கள் மீது அன்பு செலுத்துவது போல வேறு எதன்மீதும் கடவுள் அன்பு செலுத்துவதில்லை. ஞானம் - கதிரவனை விட அழகானது; விண்மீன் கூட்டத்தினும் சிறந்தது; ஒளியைக் காட்டிலும் மேலானது. இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது. ஆனால், ஞானத்தைத் தீமை மேற்கொள்ளாது.
ஞானம் - ஒரு கோடி முதல் மறு கோடிவரை ஆற்றலோடு செல்கிறது; எல்லாவற்றையும் முறையாக ஒழுங்குபடுத்துகிறது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment