Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, November 16, 2023

நவம்பர் 17 : முதல் வாசகம்ஆண்டவரை இன்னும் மிக விரைவில் அறியத் தவறியது ஏன்?சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 13: 1-9

நவம்பர் 17 :  முதல் வாசகம்

ஆண்டவரை இன்னும் மிக விரைவில் அறியத் தவறியது ஏன்?

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 13: 1-9
கடவுளை அறியாத மனிதர் அனைவரும் இயல்பிலேயே அறிவிலிகள் ஆனார்கள். கண்ணுக்குப் புலப்படும் நல்லவற்றினின்று இருப்பவரைக் கண்டறிய முடியாதோர் ஆனார்கள். கைவினைகளைக் கருத்தாய் நோக்கியிருந்தும் கைவினைஞரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மாறாக, தீயோ, காற்றோ, சூறாவளியோ, விண்மீன்களின் சுழற்சியோ, அலைமோதும் வெள்ளமோ, வானத்தின் சுடர்களோதாம் உலகை ஆளுகின்ற தெய்வங்கள் என்று அவர்கள் கருதினார்கள்.

அவற்றின் அழகில் மயங்கி அவற்றை அவர்கள் தெய்வங்களாகக் கொண்டார்கள் என்றால், அவற்றிற்கெல்லாம் ஆண்டவர் அவற்றினும் எத்துணை மேலானவர் என அறிந்துகொள்ளட்டும்; ஏனெனில் அழகின் தலையூற்றாகிய கடவுளே அவற்றை உண்டாக்கினார். அவற்றின் ஆற்றலையும் செயல்பாட்டையும் கண்டு அவர்கள் வியந்தார்கள் என்றால், அவற்றையெல்லாம் உருவாக்கியவர் அவற்றை விட எத்துணை வலிமையுள்ளவர் என்பதை அவற்றிலிருந்து அறிந்து கொள்ளட்டும். ஏனெனில் படைப்புகளின் பெருமையினின்றும் அழகினின்றும் அவற்றைப் படைத்தவரை ஒப்புநோக்கிக் கண்டுணரலாம்.

இருப்பினும், இம்மனிதர்கள் சிறிதளவே குற்றச்சாட்டுக்கு உரியவர்கள். ஏனெனில் கடவுளைத் தேடும்போதும் அவரைக் கண்டடைய விரும்பும்போதும் ஒருவேளை அவர்கள் தவறக்கூடும். அவருடைய வேலைப்பாடுகளின் நடுவே வாழும்பொழுது கடவுளை அவர்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் காண்பதையே நம்பிவிடுகின்றார்கள்; ஏனெனில் அவை அழகாக உள்ளன. இருப்பினும், அவர்களுக்கும் மன்னிப்பே கிடையாது! உலகை ஆராய்ந்தறியும் அளவுக்கு ஆற்றல் அவர்களுக்கு இருந்தபோதிலும், இவற்றுக்கெல்லாம் ஆண்டவரை இன்னும் மிக விரைவில் அறியத் தவறியது ஏன்?

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment