நவம்பர் 18 : முதல் வாசகம்
ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 14-16; 19: 6-9
எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்துவிட்ட வேளையில், எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையைவிட்டு எழுந்து, அஞ்சா நெஞ்சம் கொண்ட போர் வீரனைப் போல் அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட நாட்டின் மீது வந்து பாய்ந்தது.
உமது தெளிவான கட்டளையாகிய கூரிய வாளை ஏந்தியவண்ணம் அது நின்று கொண்டு, எல்லாவற்றையும் சாவினால் நிரப்பியது; மண்ணகத்தில் கால் ஊன்றியிருந்த போதிலும், விண்ணகத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. உம் பிள்ளைகள் தீங்கின்றிக் காக்கப்படும்படி, படைப்பு முழுவதும் உம் கட்டளைகளுக்குப் பணிந்து, மீண்டும் தன் இயல்பில் புத்துயிர் பெற்றது. அவர்களது பாசறைக்கு முகில் நிழல் கொடுத்தது. முன்பு தண்ணீர் இருந்த இடத்தில் பின்பு உலர்ந்த தரை தோன்றிற்று.
செங்கடலினூடே தங்குதடை இல்லாத வழியும், சீறிப்பாயும் அலைகளினூடே புல்திடலும் உண்டாயின. உமது கைவன்மையால் காப்பாற்றப்பட்ட மக்கள் அனைவரும் அவ்வழியே கடந்து சென்றனர். உம்முடைய வியத்தகு செயல்களை உற்றுநோக்கிய வண்ணம் சென்றனர். குதிரைகளைப் போலக் குதித்துக் கொண்டும், ஆட்டுக்குட்டிகளைப் போலத் துள்ளிக்கொண்டும், தங்களை விடுவித்த ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
No comments:
Post a Comment