Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, November 24, 2023

நவம்பர் 25 : முதல் வாசகம்எருசலேமில் நான் புரிந்த தீமைகளை இப்போது நினைவுகூர்கிறேன்; துயரமிகுதியால் அழிந்து கொண்டிருக்கிறேன்.மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 6: 1-13

நவம்பர் 25 :  முதல் வாசகம்

எருசலேமில் நான் புரிந்த தீமைகளை இப்போது நினைவுகூர்கிறேன்; துயரமிகுதியால் அழிந்து கொண்டிருக்கிறேன்.

மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 6: 1-13
அந்நாள்களில்

அந்தியோக்கு மன்னன் மேற்கு மாநிலங்கள் வழியாகச் சென்றபோது, பாரசீக நாட்டு எலிமாய் நகர் பொன், வெள்ளிஆகியவற்றுக்குப் புகழ் பெற்றது என்று கேள்விப்பட்டான். அதன் கோவிலில் மிகுந்த செல்வம் இருந்தது என்றும் கிரேக்க நாட்டை முதன்முதல் ஆண்ட மாசிடோனிய மன்னரான பிலிப்பின் மகன் அலெக்சாண்டர் அங்கே விட்டுச் சென்றிருந்த பொற்கேடயங்களும் மார்புக் கவசங்களும் படைக்கலன்களும் அங்கு இருந்தன என்றும் அறிய வந்தான். எனவே அந்தியோக்கு புறப்பட்டு நகரைக் கைப்பற்றிக் கொள்ளையடிக்க முயன்றான்; ஆனால், முடியவில்லை; ஏனெனில் அந்த நகர மக்கள் அவனது திட்டத்தை அறிந்திருந்தார்கள். அவர்கள் அவனை எதிர்த்துப் போரிட்டார்கள். ஆகவே அவன் பின்வாங்கி, பெரும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து பாபிலோனுக்குத் தப்பிச் சென்றான்.

யூதேயா நாட்டை எதிர்த்துச் சென்றிருந்த அவனுடைய படைகள் முறியடிக்கப்பட்ட செய்தியை அவன் பாரசீகத்தில் இருந்தபோது தூதர் ஒருவர் அவனுக்கு அறிவித்தார்; “லீசியா வலிமை வாய்ந்த படையோடு முதலில் சென்று யூதர்கள் முன் புறமுதுகு காட்டி ஓடிவிட்டான்; முறியடிக்கப்பட்ட படைகளிடமிருந்து யூதர்கள் கொள்ளையடித்த படைக்கலன்கள், மிகுதியான பொருள்கள் ஆகியவற்றால் அவர்கள் வலிமைமிக்கவர்கள் ஆனார்கள்; எருசலேமில் இருந்த பலிபீடத்தின்மேல் அந்தியோக்கு செய்து வைத்திருந்த நடுங்க வைக்கும் தீட்டை அவர்கள் தகர்த்தெறிந்தார்கள்; திருஉறைவிடத்தைச் சுற்றிலும் முன்புபோல் உயர்ந்த மதில்கள் எழுப்பியுள்ளார்கள்; அவனுடைய நகராகிய பெத்சூரைச் சுற்றிலும் அவ்வாறே செய்திருக்கிறார்கள்” என்றும் எடுத்துரைத்தார்.

இச்செய்தியைக் கேட்ட மன்னன் அதிர்ச்சியடைந்து மிகவும் நடுங்கினான்; தான் திட்டமிட்ட வண்ணம் நடவாததால் துயரம் தாங்காது நோயுற்றுப் படுத்த படுக்கையானான்.

கடுந்துயரம் அவனை ஆட்கொண்டதால் அங்குப் பல நாள் கிடந்தான்; தான் விரைவில் சாகவிருந்ததை உணர்ந்தான். ஆகவே அவன் தன் நண்பர் எல்லாரையும் அழைத்து, “என் கண்களினின்று தூக்கம் அகன்றுவிட்டது; கவலையினால் என் உள்ளம் உடைந்து விட்டது. ‘எவ்வளவு துயரத்திற்கு ஆளானேன்! இப்போது எத்துணைப் பெரும் துயரக் கடலில் அமிழ்ந்துள்ளேன்! நான் ஆட்சியில் இருந்தபோது அன்பு செலுத்தி, அன்பு பெற்றேனே’ என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஆனால் எருசலேமில் நான் புரிந்த தீமைகளை இப்போது நினைவுகூர்கிறேன்; அங்கு இருந்த பொன், வெள்ளிக் கலன்கள் அனைத்தையும் கவர்ந்து சென்றேன்; யூதேயாவில் குடியிருந்தவர்களைக் காரணமின்றி அழித்தொழிக்கும்படி கட்டளையிட்டேன். இதனால்தான் இந்தக் கேடுகள் எனக்கு வந்துற்றன என நான் அறிவேன். இப்போது அயல்நாட்டில் துயரமிகுதியால் அழிந்து கொண்டிருக்கிறேன்” என்று கூறினான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment