நவம்பர் 29 : முதல் வாசகம்
மனித கைவிரல்கள் தோன்றி எழுதத் தொடங்கின.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 5: 1-6, 13-14, 16-17, 23-28
அந்நாள்களில்
பெல்சாட்சர் என்ற அரசன் உயர்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப் பெரியதொரு விருந்து வைத்தான்; அந்த ஆயிரம் பேருடன் அவனும் திராட்சை மது குடித்தான். அவ்வாறு குடித்துக்கொண்டிருந்தபொழுது, அரசன் தானும் தன் மனைவியரும் வைப்பாட்டிகளும் குடிப்பதற்கென்று, தன் தந்தையாகிய நெபுகத்னேசர் எருசலேம் திருக்கோவிலிலிருந்து கொண்டு வந்திருந்த பொன், வெள்ளிக் கிண்ணங்களைக் கொண்டுவரச் சொன்னான்.
அதன்படி, எருசலேமிலிருந்த கடவுளின் கோவிலிலிருந்து கொண்டு வந்த பொன் கிண்ணங்களை எடுத்து வந்தார்கள்; அரசனும் அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடித்தார்கள். அவர்கள் திராட்சை மது குடித்துக் கொண்டே பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.
திடீரென்று ஒரு மனிதனுடைய கைவிரல்கள் தோன்றி அரசனது அரண்மனை உட்சுவரில் விளக்குத் தூணுக்கு எதிரே எழுதத் தொடங்கின. அவ்வாறு எழுதும்போது அரசன் அந்த உள்ளங்கையைப் பார்த்தான். அதைக் கண்டு அரசன் முகம் கறுத்து, நெஞ்சம் கலங்கி, குலைநடுங்கி, தொடை நடுக்கமுற்றான்.
இதற்கு விளக்கம் அளிக்குமாறு, அரசன் முன்னிலைக்குத் தானியேல் அழைத்து வரப்பட்டார். அரசன் அவரைப் பார்த்து, “என் தந்தையாகிய அரசன் யூதாவிலிருந்து சிறைப்பிடித்து வந்தவர்களுள் ஒருவனாகிய தானியேல் என்பவன் நீதானே? உன்னிடத்தில் புனிதமிகு கடவுளின் ஆவியும் அறிவொளியும் நுண்ணறிவும் சிறந்த ஞானமும் உண்டென உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். விளக்கங்கள் கூறவும் சிக்கல்களைத் தீர்க்கவும் உன்னால் முடியும் எனக் கேள்விப்படுகிறேன். இப்பொழுது நீ இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை விளக்கினால், உனக்கு அரச உடை உடுத்தி, கழுத்தில் பொன் மாலை அணிவித்து, என் அரசில் மூன்றாம் நிலையில் உன்னை அமர்த்துவேன்” என்றான்.
அப்பொழுது அரசனுக்குத் தானியேல் மறுமொழியாகக் கூறியது: “உம்முடைய அன்பளிப்புகள் உம்மிடமே இருக்கட்டும்; உம் பரிசுகளை வேறு யாருக்காவது கொடும். ஆயினும், இந்தச் சொற்களை அரசருக்குப் படித்துக் காட்டி அவற்றின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன். விண்ணுலக ஆண்டவருக்கு எதிராக உம்மையே உயர்த்தினீர்; அவரது கோவிலின் கிண்ணங்களைக் கொண்டு வரச் செய்து, நீரும் உம் உயர்குடி மக்களும், உம்முடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அவற்றிலிருந்து திராட்சை மது குடித்தீர்கள்; மேலும் காணவோ, கேட்கவோ, எதையும் உணரவோ இயலாத வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள். ஆனால் உமது உயிரையும் உம் வழிகளையும் தம் கைக்குள் வைத்திருக்கும் கடவுளை நீர் பெருமைப்படுத்தவில்லை. ஆகையால் அவர் இந்தக் கையைத் தம் திருமுன்னின்று அனுப்பி, இந்த எழுத்துக்களைப் பொறிக்கச் செய்தார்."
பொறிக்கப்பட்ட சொற்களாவன: “மேனே மேனே, தேகேல், பார்சின்” இவற்றின் உட்பொருள்: ‘மேனே: கடவுள் உமது அரசின் நாள்களை எண்ணி வரையறுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார். தேகேல்: நீர் தராசில் நிறுக்கப்பட்டீர்; எடையில் மிகவும் குறைந்துள்ளீர். பார்சின்: உமது அரசு பிரிக்கப்பட்டு மேதியருக்கும் பாரசீகருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment