நவம்பர் 7 : முதல் வாசகம்
ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 5-16ab
சகோதரர் சகோதரிகளே,
நாம் பலராய் இருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம். ஆயினும், நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு அருள்கொடைகளைப் பெற்றுள்ளோம். இறைவாக்கு உரைக்கும் கொடையை நாம் பெற்றிருந்தால் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அதைப் பயன்படுத்த வேண்டும். தொண்டாற்றும் கொடையை நாம் பெற்றிருந்தால் அதைத் தொண்டு புரிவதற்குப் பயன்படுத்த வேண்டும். கற்றுக்கொடுப்போர் கற்றுக்கொடுப்பதிலும், ஊக்கமூட்டுவோர் ஊக்கம் தருவதிலும், தமக்குள்ளதை வழங்குவோர் தாராளமாய்க் கொடுப்பதிலும், தலைமை தாங்குவோர் முழு ஆர்வத்தோடு செயல்படுவதிலும், இரக்கச் செயல்களில் ஈடுபடுவோர் முக மலர்ச்சியோடு அவற்றைச் செய்வதிலும் தாம் பெற்ற அருள் கொடைகளைப் பயன்படுத்த வேண்டும்.
உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களை விட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். விடாமுயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள். எதிர் நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள். வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.
உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம். மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள். நீங்கள் ஒரு மனத்தவராய் இருங்கள்; உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment