டிசம்பர் 14 : முதல் வாசகம்
இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 41: 13-20
நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, “அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்” என்று உன்னிடம் சொல்பவரும் நானே.
“யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன்,” என்கிறார் ஆண்டவர். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர். இதோ, நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன். நீ மலைகளைப் போரடித்து நொறுக்குவாய்; குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய். அவற்றைத் தூற்றுவாய், காற்று அவற்றை வாரிக்கொண்டுபோம்; புயல் அவற்றைச் சிதறடிக்கும்; ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்; இஸ்ரயேலின் தூயவரில் மேன்மை அடைவாய்.
ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்; அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்; ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்; இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன். பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்; பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்; பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்.
பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன்; சித்திம் மரம், மிருதுச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன்; பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும் வைப்பேன். அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச்செய்தார் என்றும் இஸ்ரயேலின் தூயவர் அதைப் படைத்தார் என்றும் மக்கள் கண்டு உணர்ந்து கொள்வர்; ஒருங்கே சிந்தித்துப் புரிந்து கொள்வர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment