கிறிஸ்து பிறப்பு பெருவிழா
நள்ளிரவு திருப்பலி
டிசம்பர் 25 : முதல் வாசகம்
ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 2-4, 6-7
காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.
ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ‘வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment