மார்ச் 10 : முதல் வாசகம்
ஆண்டவரின் சினமும் இரக்கமும் மக்கள் நாடுகடத்தப்படுதலிலும், அவர்கள் மீட்கப்பெறுவதிலும் வெளியாகின்றன.
குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 36: 14-16, 19-23
அந்நாள்களில்
குருக்களின் தலைவர்களும் மக்களும் வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும் தொடர்ந்து செய்து, உண்மையற்றவர்களாய், ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையாக்கியிருந்த திருக்கோவிலை மேலும் தீட்டுப்படுத்தினர். அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவர் தம் மக்களின்மீதும், தம் உறைவிடத்தின்மீதும் இரக்கம் கொண்டு, தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார். ஆனால் அவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர். ஆதலால், அவர்கள் தப்ப முடியாத அளவுக்கு ஆண்டவரது சினம் அவர்கள்மேல் கனன்றெழுந்தது.
கடவுளின் இல்லத்தை அவர்கள் எரித்து, எருசலேமின் மதில்களைத் தகர்த்தனர்; அங்கிருந்த அனைத்து அரண்மனைகளையும் தீக்கிரையாக்கி, விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தையும் அழித்தனர். மேலும் அவன் வாளுக்குத் தப்பியவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினான்; பாரசீக அரசு எழும்பும்வரை, அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் அடிமைகளாக இருந்தனர். “நாடு, ஓய்வு நாள்களைக் கடைப்பிடிக்காததால், எழுபது ஆண்டுகள் பாழாய்க் கிடக்கும்” என்று எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் இவ்வாறு நிறைவேறின.
பாரசீக மன்னன் சைரசு ஆட்சியின் முதல் ஆண்டில், எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் நிறைவேறும் வண்ணம், ஆண்டவர் அவனது மனத்தைத் தூண்டி எழுப்பினார். எனவே அவன் தனது நாடு முழுவதற்கும் மடல் வரைந்து அறிவித்தது யாதெனில்: “பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம் கூறுவது இதுவே: விண்ணகக் கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள் எல்லாவற்றையும் எனக்கு அளித்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்புமாறு எனக்குப் பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!”
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment