மே 30 : முதல் வாசகம்
நீங்கள் அரச குருக்கள், தூய மக்கள், உங்கள் அழைப்புக்கேற்ப ஒழுகுங்கள்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 2-5, 9-12
அன்பிற்குரியவர்களே,
புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாய் இருங்கள். இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளருவீர்கள்.
உயிருள்ள கல்லாகிய அவரை அணுகுங்கள். மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உயர் மதிப்புள்ள கல் அதுவே. நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக! இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக!
ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி. முன்பு நீங்கள் ஒரு மக்களினமாய் இருக்கவில்லை; இப்பொழுது கடவுளுடைய மக்களாக இருக்கிறீர்கள். முன்பு இரக்கம் பெறாதவர்களாய் இருந்தீர்கள்; இப்பொழுதோ இரக்கம் பெற்றுள்ளீர்கள்.
அன்பிற்குரியவர்களே, நீங்கள் அன்னியரும் தற்காலக் குடிகளுமாய் இருப்பதால், ஆன்மாவை எதிர்த்துப் போர் புரியும் ஊனியல்பின் இச்சைகளை விட்டுவிடும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன். பிற இனத்தினர் நடுவில் நன்னடத்தை உடையவராய் இருங்கள். அவர்கள் உங்களைத் தீயவர்கள் என்று பழித்துரைப்பினும், உங்கள் நற்செயல்களைக் கண்டு, கடவுள் சந்திக்க வரும் நாளில் அவரைப் போற்றிப் புகழ்வார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment