ஜூன் 13 : முதல் வாசகம்
எலியா செபித்தார். வானம் பொழிந்தது.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 18: 41-46
அந்நாள்களில்
எலியா ஆகாபை நோக்கி, “நீர் போய் உணவும் பானமும் அருந்துவீர். ஏனெனில் பெருமழையின் ஓசை கேட்கிறது” என்றார். ஆகாபு உணவும் பானமும் அருந்தச் சென்றவுடன், எலியா கர்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று, அங்கே தரையில் மண்டியிட்டுத் தம் முழங்கால்களுக்கு இடையே முகத்தைப் புதைத்துக்கொண்டார். பின்பு அவர் தம் பணியாளனை நோக்கி, “நீ போய்க் கடல் பக்கமாய்ப் பார்” என்றார். அவன் போய்ப் பார்த்து, “ஒன்றும் இல்லை” என்றான். எலியா அவனை நோக்கி, “ஏழுமுறை மீண்டும் சென்று பார்” என்றார்.
ஏழாம் முறை அவன் சென்று பார்த்து, “இதோ, மனித உள்ளங்கையளவு சிறிய மேகம் ஒன்று கடலிலிருந்து எழும்பி மேலே வருகிறது” என்றான். அப்போது எலியா அவனை நோக்கி, “நீ போய் ஆகாபிடம், மழை தடுத்து நிறுத்தாதபடி தேரைப் பூட்டிப் போய்விடும்படி சொல்” என்றார்.
இதற்கிடையில் வானம் இருண்டது; கார்மேகம் சூழ்ந்தது. காற்று அடித்தது. பெரும் மழை பெய்தது. ஆகாபு தேரில் ஏறி இஸ்ரியேலுக்குச் சென்றான். அந்நேரத்தில் ஆண்டவரின் ஆற்றல் எலியாவின்மேல் வந்திறங்க, அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு, இஸ்ரியேல் வரை ஆகாபுக்கு முன்னே ஓடினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment