ஜூன் 22 : முதல் வாசகம்
அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார்.
குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 17-25
யோயாதா இறந்தபின், அரசர் தம்மைப் பணிந்து நின்ற தலைவர்களின் சொற்களுக்கு இணங்கினார். அதனால் அவர்கள் தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப் புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் வழிபட்டனர். அவர்கள் செய்த இப்பாவத்தின் பொருட்டு யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் இறைவன் கடுங்கோபம் கொண்டார். அவர்கள் தம்மிடம் மீண்டும் வருவதற்கு ஆண்டவர் அவர்களிடம் இறைவாக்கினர்களை அனுப்பினார். அவர்களும் மக்களைக் கண்டித்தனர். ஆனால் அவர்கள் செவி கொடுக்கவில்லை.
அப்போது கடவுளின் ஆவி குரு யோயாதாவின் மகன் செக்கரியாவின் மேல் இறங்கியது; அவர் மக்கள் முன் நின்று அவர்களை நோக்கி: “இதோ, கடவுள் கூறுகிறார்: ஆண்டவரின் கட்டளைகளை மீறுவதேன்? அதனால் நீங்கள் வாழ்வில் முன்னேற மாட்டீர்களே! ஆண்டவரை நீங்கள் புறக்கணித்ததால், அவரும் உங்களைப் புறக்கணித்துள்ளார்” என்று கூறினார்.
அவர்கள் அவருக்கு எதிராகச் சதி செய்து, அரசரின் ஆணைக்கேற்ப ஆண்டவரின் இல்லத்து மண்டபத்தில் அவரைக் கல்லால் எறிந்து கொன்றனர். அவர் தந்தை யோயாதா காட்டிய பேரன்பை மறந்து, அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார். அவர் இறக்கும்போது, “ஆண்டவர் இதைக் கண்டு பழிவாங்குவாராக!” என்றார்.
அடுத்த ஆண்டு, சிரியாப் படையினர் அவருக்கு எதிராக வந்து, யூதாவிலும் எருசலேமிலும் புகுந்து மக்களின் எல்லாத் தலைவர்களையும் கொன்று அழித்தனர். கொள்ளைப் பொருள்கள் அனைத்தையும் தமஸ்கு மன்னனிடம் அனுப்பி வைத்தனர்.
சிரியர் மிகச் சிறு படையுடன்தான் வந்தனர்; இருப்பினும், தங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவரை இஸ்ரயேலர் புறக்கணித்ததால், ஆண்டவர் அவர்களது பெரும் படையைச் சிரியரின் கையில் ஒப்புவித்தார். அவர்கள் யோவாசைத் தண்டித்தனர். கடும் காயமுற்ற நிலையில் யோவாசைச் சிரியர் விட்டுச் சென்றனர்.
அவருடைய அலுவலர்களோ அவருக்கு எதிராகச் சதி செய்து, குரு யோயாதாவின் மகனின் இரத்தப் பழியின் பொருட்டு அவரது படுக்கையிலேயே அவரைக் கொன்றனர். தாவீதின் நகரத்தில் அவர் சடலத்தை அடக்கம் செய்தனர்; ஆனால் அரசர்களின் கல்லறைகளில் அவரை அடக்கம் செய்யவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment