டிசம்பர் 22 : நற்செய்தி வாசகம்
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45
அக்காலத்தில்
மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஒர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.
மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
---------------------------------------------------------
“அவரே அமைதியை அருள்வார்”
திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு
I மீக்கா 5: 2-5a
II எபிரேயர் 10: 5-10
III லூக்கா 1: 39-45
“அவரே அமைதியை அருள்வார்”
நிகழ்வு
‘நாடுகளுக்கிடையே அமைதி ஏற்பட வேண்டும்’ என்பதற்காக ஓராண்டு, ஈராண்டு ஆண்டுகள் அல்ல, முப்பது ஆண்டுகள் நடைபயணம் மேற்கொண்ட ஒருவரை உங்களுக்குத் தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள்.
அமெரிக்காவில் உள்ளா கலிபோனியா மாகாணத்தைச் சார்ந்தவர் மில்ட்ரெட் லிசெட் நார்மன் (Mildred Lisette Norman) என்ற பெண்மணி. இவர் உலக நாடுகள் அமைதி இல்லாமல் இருப்பதை அறிந்தார். குறிப்பாக, இவர் அமெரிக்கா, கொரியாவின்மீதும் வியட்நாம்மீதும் போர்தொடுத்து, அமைதிக்குப் ஊறுவிளைவிப்பதை அறிந்தார். ஆகவே, இவர், நாடுகள்மீது போர்தொடுத்து அமைதிக்கு ஊருவிளைத்துக்கொண்டிருக்கும் அமெரிக்கா அமைதி வழிக்குத் திரும்ப வேண்டும் என்றும், பிற நாடுகளும் அமைதி வழிக்குத் திரும்ப வேண்டும் என்றும் நடைபயணத்தை மேற்கொண்டார்.
1953, ஜனவரி 1 அன்று கலிபோனியாவில் உள்ள பசதெனா (Pasadena) என்ற இடத்திலிருந்து தன்னுடைய நடைபயணத்தைத் தொடங்கிய இவர், நாற்பதாயிம் கிலோமீட்டர் தூரம் நடந்தார். இடை இடையே இவர் கோயில்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் அமைதியை வலியுறுத்தி உரை நிகழ்த்தினார். வானொலி, தொலைகாட்சியிலும்கூட இவர் அமைதியை வலியுறுத்தி உரை நிகழ்த்தினார். தனக்குக் கிடைத்த உணவினை உண்டு, கிடைத்த இடத்தில் தங்கி, வழியெங்கும் அமைதியை வலியுறுத்திச் சென்ற இவர் உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். இதனால் இவர், ‘அமைதியின் திருப்பயணி’ என அழைக்கப்பாடலானார்.
ஆம், உலக நாடுகள் அமைதி வழிக்குத் திரும்பவேண்டும் என்பதற்காக முப்பது ஆண்டுகள், அமைதியை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்ட மில்ட்ரெட் லிசெட் நார்மன் இந்த உலகிற்கு அமைதி எவ்வளவு தேவையாக இருக்கின்றது என்பதைத் அருமையாக உணர்த்துகின்றார். திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, மெசியாவாம் இயேசு நமக்கு அமைதி அருள்வார் என்ற செய்தியைத் தருகின்றது. இயேசு தரும் அமைதி எத்தகையது, அவர் தரும் அமைதியைப் பெற நாம் என்ன செய்வது என்பன குறித்து நாம் சிந்திப்போம்.
இறைவாக்கினர் மீக்கா அறிவித்த நம்பிக்கைச் செய்தி:
இறைவாக்கினர் மீக்கா (கி.மு. 740-670) கி.மு எட்டாம் நூற்றாண்டில் தென்னாடான யூதாவில் பிறந்தவர். இறைவாக்கினர்கள் எசாயா, ஆமோஸ், ஓசேயா ஆகியோரின் சமகாலத்தில் வாழ்ந்தவரான இவர், வடநாட்டைப் போலவே தென்னாட்டிலும் பணக்காரர்கள் ஏழைகளை ஒடுக்கியும், நலிந்தவர்களை வஞ்சித்தும் வாழந்ததால், அவர்களுக்கு எதிரான கடவுளின் தண்டனைத் தீர்ப்பினை முன்னறிவித்தார். கூடவே அவர்களுக்கு மீட்புச் செய்தியை அல்லது நம்பிக்கைச் செய்தியையும் இவர் முன்னறிவிக்கின்றார்.
மீக்கா முன்னறிவித்தது போன்று, உண்மைக் கடவுளை மறந்து வேற்று தெய்வங்களை வழிபட்டும், ஏழைகளை வஞ்சித்தும் வாழ்ந்த யூத நாட்டினர்மீது தண்டனைத் தீர்ப்பு வந்தது. அது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் வழியாக வந்தது. அதேநேரத்தில் எல்லாம் முடிந்துபோய்விட்டது என்றிருந்த யூதா நாட்டினருக்கு, “பெத்லகேமே! இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகிறவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; அவரே அமைதியை அருள்வார்” என்ற நம்பிக்கைச் செய்தியும் வந்தது.
ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதியை அருள்வார் எனில், இனிமேல் அவர்களுடைய வாழ்வில் துன்பமே இருக்காது என்று அர்த்தமில்லை; மாறாக, ஆண்டவர் அவர்களோடு எப்போதும் இருப்பார் என்ற நம்பிக்கையே, ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதியை அருள்வார் என்பதன் அர்த்தமாகும். இத்தகைய அமைதியை ஆண்டவர் தம் மக்களுக்கு எத்தகைய வகையில் அருளினார் என்று தொடர்ந்து நாம் சிந்திப்போம்.
அமைதி ஏற்பட தன்னையே தன்னையே தந்த இயேசு
ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதியை அருள்வார் என்று இறைவாக்கினர் மீக்கா முன்னறிவித்த வார்த்தைகள் இயேசுவில் நிறைவேறின; ஆனால், யூதர்கள் எதிர்பார்த்தது போன்று, ஆண்டவர் இயேசு அமைதியை அருளவில்லை. யூதர்கள் எதிர்பார்த்தது, மெசியா தம் அதிகாரத்தினால் அமைதியை நிலைநாட்டுவார் என்பது. உண்மையில் நடந்ததோ, இயேசு அன்பினால் அமைதியை நிலைநாட்டியது. அதிகாரத்தால் நிலைநாட்டப்படும் அமைதி நீண்ட நாள்கள் நீடித்து இருப்பதில்லை; அன்பினால் நிலைநாட்டப்படும் அமைதியே நீடித்து இருக்கும். அதனாலேயே இயேசு, “நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல” (யோவா 14:27) என்கிறார். மேலும், இவ்வாறு சொன்ன இயேசு, யூதர்கள், பிற இனத்தார் என்ற இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தம் உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார் (எபே 2: 14).
இயேசு இரு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்ற சுவரைத் தகர்த்தெறிந்தார் எனில், அது அவருடைய உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாகவே சாத்தியப்பட்டது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்” என்று சொல்லி, இயேசு தம் உடலையே பலியாக செலுத்தியது குறித்து வாசிக்கின்றோம். இயேசு, தந்தையின் திருவுளமான அமைதியை அருள்வதற்கு வந்தார் எனில், அவர் தம் உடலையே பலியாகச் செலுத்தி அமைதியை அருளினார். இதுதான் இந்த உலகம் அருளும் அமைதிக்கும், இயேசு அருளும் அமைதிக்கும் உள்ள வித்தியாசமாகும். இயேசு தம்மையே பலியாகச் செலுத்தி இவ்வுலகிற்கு அமைதியை அருளினார் எனில், அவர் வழியில் நடக்கும் ஒவ்வொருவரும் தம்மையே கையளித்து, இவ்வுலகில் அமைதியை நிலைநாட்ட முன்வரவேண்டும்.
அமைதியின் தூதுவரான மரியா:
பன்னிருவரைப் பணித்தளங்களுக்கு அனுப்புகிறபோது இயேசு அவர்களிடம், “.....வீட்டுக்குள் செல்லும்பொழுது வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்” (மத் 10:12) என்பார். திருத்தந்தை பிரான்சிஸ் சொல்வதுபோல், “இயேசுவைப் பின்தொடர்வதில் நம் அனைவருக்கும் முன்னோடியாக இருப்பவர் மரியா”. அந்த வகையில், மரியா, தன் முதிர்ந்த வயதில் கருவுற்றிருந்த எலிசபெத்தின் வீட்டிற்குச் சென்று, அவரை வாழ்த்துகின்றார். மரியாவின் வாழ்த்தில் அமைதி உட்பட எல்லா ஆசிகளும் நிறைந்திருந்தன. அதனாலேயே எலிசபெத்தின் வயற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளுகின்றது. இதன்மூலம் மரியா இயேசுவின் உண்மையான சீடராக, அமைதியின் தூதுவராகச் செயல்பட்டார் என்று சொல்ல வேண்டும்.
ஆம், இயேசு தன் உடலில் ஏற்ற துன்பங்களின் வழியாக இவ்வுலகிற்கு அமைதியை அருளினார், அவருடைய சீடர்களாகிய நாம் ஒவ்வொருவரும் மரியாவைப் போன்று மக்களுக்கு அமைதியை வழங்கவேண்டும். ஏனெனில், இவ்வுலகிற்கு வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு அமைதி தேவைப்படுகின்றது. எனவே, நாம் கடவுள் அருளிய அமைதியை, மரியாவைப் போன்று மற்றவர்களுக்கு வழங்கி, இந்த வையகம் அமைதியில் திளைத்திடச் செய்வோம்.
சிந்தனை
‘உண்மையின்றி உண்மையான அமைதி கிடையாது’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் உண்மையாம் இயேசுவின் வழியில் நடந்து, இவ்வுலகில் உண்மையான அமைதியை நிலைநாட்டி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
No comments:
Post a Comment