டிசம்பர் 6 : முதல் வாசகம்
ஆண்டவருக்குரிய நாளில், பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24
இறைவனாகிய ஆண்டவர் கூறுவது: இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம்மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ? அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்; பார்வையற்றோரின் கண்கள் காரிருளில் இருந்தும் மையிருளில் இருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும். ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்; மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர். கொடியோர் இல்லாதொழிவர்; இகழ்வோர் இல்லாமற் போவர்; தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர். அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்; பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர்.
ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப்பற்றிக் கூறுவது: இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை; அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை. அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்; நான் செய்யவிருக்கும் என் கைவேலைப் பாடுகளைக் காணும்போது யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்; இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர். தவறிழைக்கும் சிந்தைகொண்டோர் உணர்வடைவர்; முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக்கொள்வர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment