சனவரி 13 : முதல் வாசகம்
கடவுள் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-6
பல முறை, பல வகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.
கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். இவ்வாறு இறைமகன் வானதூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார்.
ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது “நீ என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” என்றும், “நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார்” என்றும் எப்போதாவது கூறியதுண்டா? மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, “கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment