சனவரி 18 : நற்செய்தி வாசகம்
நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-17
இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட்டனர்.
இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, “நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment