ஏப்ரல் 18 : முதல் வாசகம்
வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 13-15, 17-19
அந்நாள்களில்
பேதுரு மக்களை நோக்கிக் கூறியது: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர் இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள். நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டீர்கள். வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள்.
அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத் தெரியும். ஆனால் கடவுள், தம் மெசியா துன்புற வேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார். எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம் மாறி அவரிடம் திரும்புங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment