14 மே 2021, வெள்ளி, புனித மத்தியா - திருத்தூதர் விழா
முதல் வாசகம்
சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 15-17, 20-26
ஒரு நாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது: “அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்துத் தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேறவேண்டியிருந்தது. அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.
திருப்பாடல்கள் நூலில், ‘அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக!’ என்றும் ‘அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்!’ என்றும் எழுதப்பட்டுள்ளது.
ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்ட காலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடிவரவேண்டியது தேவையாயிற்று. யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலமுதல் ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் நம்மோடு இருந்திருக்க வேண்டும்.”
அத்தகையோருள் இருவரை முன்னிறுத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா. இவருக்கு யுஸ்து என்னும் பெயரும் உண்டு. மற்றவர் மத்தியா.
பின்பு அவர்கள் அனைவரும், “ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே, யூதாசு திருத்தொண்டையும் திருத்தூதுப் பணியையும் விட்டகன்று தனக்குரிய இடத்தை அடைந்துவிட்டான். அந்த யூதாசுக்குப் பதிலாக யாரைத் தெரிந்தெடுக்க வேண்டும் என இந்த இருவருள் ஒருவரை எங்களுக்குக் காண்பியும்” என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டனர்.
அதன்பின் அவர்கள் சீட்டுக் குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment