மே 25 : முதல் வாசகம்
கட்டளைகளைப் பின்பற்றுவது, பலி செலுத்துவதற்கு ஒப்பாகும்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 1-12
திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது பல காணிக்கைகளைக் கொடுப்பதற்கு ஈடாகும்; கட்டளைகளைக் கருத்தில் கொள்வது நல்லுறவுப் பலி செலுத்துவதற்கு ஒப்பாகும். அன்புக்குக் கைம்மாறு செய்வது மாவுப் படையல் அளிப்பதற்கு இணையாகும்.
தருமம் செய்வது நன்றிப் பலி செலுத்துவதாகும். தீச்செயலை விட்டுவிடுதல் ஆண்டவருக்கு விருப்பமானது; அநீதியைக் கைவிடுதல் பாவக் கழுவாய்ப் பலியாகும்.
ஆண்டவர் திருமுன் வெறுங்கையோடு வராதே; கட்டளையை நிறைவேற்றவே பலிகளையெல்லாம் செலுத்து. நீதிமான்கள் காணிக்கைகளைச் செலுத்தும்போது பலிபீடத்தில் கொழுப்பு வழிந்தோட, உன்னத இறைவன் திருமுன் நறுமணம் எழுகிறது. நீதிமான்களின் பலி ஏற்றுக் கொள்ளத்தக்கது; அதன் நினைவு என்றும் நீங்காது. ஆண்டவரைத் தாராளமாய் மாட்சிமைப்படுத்து; உன் உழைப்பின் முதற்கனிகளைக் கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே. கொடை வழங்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு; பத்திலொரு பங்கை மகிழ்ச்சியோடு கடவுளுக்கு உரித்தாக்கு.
உன்னத இறைவன் உனக்குக் கொடுத்திருப்பதற்கு ஏற்ப நீயும் அவருக்குக் கொடு. உன்னால் முடிந்த அளவுக்குத் தாராளமாய்க் கொடு. ஆண்டவரே கைம்மாறு செய்பவர்; ஏழு மடங்கு உனக்குத் திருப்பித் தருபவர். ஆண்டவருக்குக் கையூட்டுக் கொடுக்க எண்ணாதே. அவர் அதை ஏற்கமாட்டார். அநீத பலியில் நம்பிக்கை வைக்காதே. ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment