ஜூன் 2 : முதல் வாசகம்
தோபித்து, சாரா ஆகிய இருவரின் மன்றாட்டும் கடவுளின் மாட்சியுடைய திருமுன் கேட்கப்பட்டது.
தோபித்து நூலிலிருந்து வாசகம் 3: 1-11, 16-17
அந்நாள்களில்
தோபித்து ஆகிய நான் மனம் வெதும்பி அழுது புலம்பினேன்; தேம்பியவாறு மன்றாடத் தொடங்கினேன்: “ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர். உம் செயல்களெல்லாம் நேரியவை; உம் வழிகள் அனைத்திலும் இரக்கமும் உண்மையும் விளங்குகின்றன. நீரே உலகின் நடுவர். இப்பொழுது, ஆண்டவரே, என்னை நினைவுகூரும்; என்னைக் கனிவுடன் கண்ணோக்கும். என் பாவங்களுக்காகவும் குற்றங்களுக்காகவும் என் மூதாதையருடைய பாவங்களுக்காகவும் என்னைத் தண்டியாதீர். என் மூதாதையர் உமக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். உம் கட்டளைகளை மீறினார்கள். எனவே நாங்கள் சூறையாடப்பட்டோம், நாடு கடத்தப்பட்டோம், சாவுக்கு ஆளானோம். வேற்று மக்களிடையே எங்களைச் சிதறடித்தீர்; அவர்களுடைய பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர். என் பாவங்களுக்கு நீர் அளித்த தீர்ப்புகள் பலவும் உண்மைக்கு ஏற்றவை. நாங்கள் உம் கட்டளைகளின்படி ஒழுகவில்லை; உம் திருமுன் உண்மையைப் பின்பற்றி வாழவில்லை. இப்பொழுது, உம் விருப்பப்படி என்னை நடத்தும்; என் உயிர் பிரிந்துவிடக் கட்டளையிடும். இவ்வாறு நான் மண்ணிலிருந்து மறைந்து மீண்டும் மண்ணாவேனாக. நான் வாழ்வதினும் சாவதே மேல்; ஏனெனில் சற்றும் பொருந்தாத பழிச்சொற்களை நான் கேட்க நேர்ந்தது. ஆகவே கடுந்துயரில் மூழ்கியுள்ளேன். ஆண்டவரே, இத்துயரத்தினின்று நான் விடுதலை பெற ஆணையிடும்; முடிவற்ற இடத்திற்கு என்னைப் போகவிடும்; உமது முகத்தை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளாதேயும்; ஆண்டவரே! வாழ்வில் மிகுந்த துன்பங்களைக் காண்பதினும், இத்தகைய இகழ்ச்சிகளைக் கேட்பதினும் நான் சாவதே மேல்."
அதே நாளில் மேதியா நாட்டின் எக்பத்தானா நகரில் வாழ்ந்து வந்த இரகுவேலின் மகள் சாரா, தன் தந்தையின் பணிப்பெண்களுள் ஒருத்தி தன்னைப் பழித்துரைத்ததைக் கேட்க நேரிட்டது. ஏனெனில் ஒருவர் இறந்தபின் ஒருவராக அவள் ஏழு ஆண்களை மணந்திருந்தாள். மனைவிகளுக்குரிய மரபுப்படி அவளுடைய கணவர்கள் அவளுடன் கூடிவாழுமுன் கொடிய அலகையான அசுமதேயு அவர்கள் எல்லாரையும் கொன்று விட்டது. இதனால் அந்தப் பணிப்பெண் அவளிடம், “நீயே உன் கணவர்களைக் கொன்றவள். நீ கணவர்கள் எழுவரை மணந்திருந்தும் அவர்களுள் எவருடைய பெயரும் உனக்கு வழங்கவில்லை. உன் கணவர்கள் இறந்துவிட்டதற்காக எங்களை ஏன் தண்டிக்கிறாய்? நீயும் அவர்களிடம் போ. உன் மகனையோ மகளையோ நாங்கள் என்றுமே காணவேண்டாம்” என்று பழித்துரைத்தாள்.
அன்று அவள் மனம் நொந்து அழுதாள்; தன்னைத் தூக்கிலிட்டுக் கொள்ளும் நோக்குடன் தன் தந்தையின் மாடியறைக்குச் சென்றாள். ஆனால் மீண்டும் சிந்தித்து, “என் தந்தையை மக்கள் பழிக்கலாம்; ‘உனக்கு ஒரே அன்பு மகள் இருந்தாள்; அவளும் தன் துயர் பொறுக்க இயலாமல் நான்றுகொண்டாள்’ என்று இகழலாம். இவ்வாறு என் தந்தை தமது முதுமையில் துயருற்று இறக்க நான் காரணம் ஆவேன். எனவே நான் நான்று கொள்ளமாட்டேன். மாறாக நான் சாகுமாறு ஆண்டவரை இரந்து வேண்டுவேன். அவ்வாறாயின் என் வாழ்நாளில் பழிச்சொற்களை இனி மேல் கேட்க வாய்ப்பு இராது” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். அதே நேரத்தில் சாரா பலகணியை நோக்கிக் கைகளை விரித்துப் பின்வருமாறு மன்றாடினாள்: “இரக்கமுள்ள இறைவா போற்றி! என்றும் உம் திருப்பெயர் போற்றி! உம் செயல்களெல்லாம் உம்மை என்றும் போற்றுக!”
அந்நேரமே தோபித்து, சாரா ஆகிய இருவருடைய மன்றாட்டும் கடவுளின் மாட்சியுடைய திருமுன் கேட்கப்பட்டது. தோபித்து தம் கண்களினால் கடவுளின் ஒளியைக் காணும்பொருட்டு அவருடைய கண்களிலிருந்து வெண்புள்ளிகளை நீக்கவும், தம் மகன் தோபியாவுக்கு இரகுவேலின் மகள் சாராவை மணமுடித்து, அசுமதேயு என்னும் கொடிய அலகையை அவளிடமிருந்து விரட்டவும், இவ்வாறு அவர்கள் இருவருக்கும் நலம் அருள இரபேல் அனுப்பப்பட்டார். சாராவை அடைய மற்ற அனைவரையும் விட தோபியாவுக்கே முன்னுரிமை இருந்தது. தோபித்து முற்றத்திலிருந்து வீட்டிற்குள் வந்தார். அதே நேரத்தில் இரகுவேலின் மகள் சாராவும் மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment