பிப்ரவரி 16 : முதல் வாசகம்
இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இராமல், அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 19-27
என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்: ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும், பேசுவதிலும் சினங்கொள்வதிலும் தாமதமும் காட்ட வேண்டும். ஏனெனில் மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது. எனவே எல்லா வகையான அழுக்கையும், உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது.
இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள். ஏனென்றால் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர், கண்ணாடியிலே தம் முகத்தைப் பார்த்துவிட்டுச் சென்று உடனே தாம் எவ்வாறு இருந்தார் என்பதை மறந்துவிடும் ஒரு மனிதருக்கு ஒப்பாவர். ஆனால் நிறைவான விடுதலையளிக்கக்கூடிய சட்டத்தைக் கூர்ந்து கவனித்து அதைத் தொடர்ந்து கற்போர் தாம் கேட்பதை மறந்து விடுவதில்லை; அவர்கள் அதற்கேற்ற செயல்களைச் செய்வார்கள்; தம் செயல்களால் பேறுபெற்றவர் ஆவார்கள்.
தாம் சமயப் பற்றுடையோர் என எண்ணிக் கொண்டிருப்போர் தம் நாவை அடக்காமல் இருப்பாரென்றால் தம்மையே ஏமாற்றிக்கொள்வர். இத்தகையோருடைய சமயப் பற்று பயனற்றது. தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment