மே 22 : முதல் வாசகம்
இன்றியமையாதவை தவிர, வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தீர்மானித்தோம்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 1-2, 22-29
அந்நாள்களில்
யூதேயாவிலிருந்து வந்த சிலர், “நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது” என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர். அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.
பின்பு திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள்.
அக்கடிதத்தில், “திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம். எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.
இன்றியமையாதவற்றைத் தவிர, அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம். சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்” என்று எழுதியிருந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment