மே 22 : இரண்டாம் வாசகம்
திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 10-14, 22-23
தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார். அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல் போன்றும் படிகக் கல் போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது. அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
நகருக்குள் கோவில் காணப்படவில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே அதன் கோவில். அந்நகருக்கு ஒளி கொடுக்கக் கதிரவனோ நிலாவோ தேவைப்படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
No comments:
Post a Comment