மார்ச் 3 : நற்செய்தி வாசகம்
இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-25
அக்காலத்தில்
யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், “இவற்றை இங்கிருந்து எடுத் துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள், “உம் இல்லத்தின்மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்” என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.
யூதர்கள் அவரைப் பார்த்து, “இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்றார். அப்போது யூதர்கள், “இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?” என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.
பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர். ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப்பற்றியும் தெரியும். மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச்சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment