மார்ச் 4 : முதல் வாசகம்
இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது.
சிரியா மன்னனின் படைத் தலைவனான நாமான் தம் தலைவனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். ஏனெனில் அவர் மூலமாய் ஆண்டவர் சிரியாவுக்கு வெற்றி அளித்திருந்தார். அவர் வலிமைமிக்க வீரர்; ஆனால் தொழுநோயாளி. சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்றபொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக்கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள். அவள் தன் தலைவியை நோக்கி, “என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்” என்றாள். எனவே நாமான் தம் தலைவனிடம் சென்று, “இஸ்ரயேல் நாட்டைச் சார்ந்த சிறுமி இன்னின்னவாறு கூறுகின்றாள்” என்று அவனுக்குத் தெரிவித்தார். அப்பொழுது சிரியா மன்னர், “சென்று வாரும். நான் இஸ்ரயேல் அரசனுக்கு மடல் தருகிறேன்” என்றார்.
எனவே நாமான் ஏறத்தாழ நானூறு கிலோ வெள்ளியையும், ஆறாயிரம் பொற்காசுகளையும், பத்துப் பட்டாடைகளையும் எடுத்துக்கொண்டு பயணமானார். அவர் இஸ்ரயேல் அரசனிடம் அம்மடலைக் கொடுத்தார். அதில் “இத்துடன், என் பணியாளன் நாமானை உம்மிடம் அனுப்புகிறேன். அவனது தொழுநோயை நீர் குணமாக்க வேண்டும்” என்று எழுதப் பட்டிருந்தது. இஸ்ரயேல் அரசன் அம்மடலைப் படித்தவுடன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “நானென்ன கடவுளா? உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் என்னால் இயலுமா? சிரியா மன்னன் ஒருவனை என்னிடம் அனுப்பி அவனுக்குள்ள தொழுநோயைக் குணப்படுத்தச் சொல்கிறானே! என்னோடு போரிட அவன் வாய்ப்புத் தேடுவதைப் பார்த்தீர்களா!” என்று கூறினான்.
கடவுளின் அடியவரான எலிசா இஸ்ரயேல் அரசன் இவ்வாறு தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்ட செய்தியைக் கேள்வியுற்று அவனிடம் ஆள் அனுப்பி, “நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அவன் என்னிடம் வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும்” என்று சொன்னார். அவ்வாறே நாமான் தம் குதிரைகளுடனும் தேருடனும் எலிசா வீட்டு வாயில்முன் வந்து நின்றார். எலிசா, “நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும்” என்று ஆள் அனுப்பிச் சொல்லச் சொன்னார். எனவே, நாமான் சினமுற்று வெளியேறினார். அப்பொழுது அவர், “அவர் என்னிடம் வந்து, என் அருகில் நின்று, தம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைக் கூவியழைத்து, தொழுநோய் கண்ட இடத்தின்மேல் தம் கையை அசைத்துக் குணப்படுத்துவாரென்று நான் எண்ணியிருந்தேன். அபானா, பர்பார் என்ற தமஸ்கு நதிகள் இஸ்ரயேலில் உள்ள ஆறுகள் அனைத்தையும்விட மேலானவை அல்லவா? அவற்றில் மூழ்கி நான் நலமடைய முடியாதா?” என்று கூறி ஆத்திரமாய்த் திரும்பிச் செல்லலானார்.
அப்பொழுது அவருடைய வேலைக்காரர்கள் அவரை அணுகி அவரிடம், “எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறி இருந்தால், நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா? மாறாக, ‘மூழ்கி எழும்; நலமடைவீர்’ என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன?” என்றனர். எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறு பிள்ளையின் உடலைப்போல் மாறினது.
பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து, “இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்துகொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment