ஜூன் 9 : இரண்டாம் வாசகம்
நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13- 5: 1
சகோதரர் சகோதரிகளே,
“நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்; ஆகவே பேசுகிறோம். ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்; உங்களையும் அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும். இவையனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப் பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும். இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார். எங்கள் உடல் அழிந்து கொண்டிருந்தாலும் எங்கள் உள்ளார்ந்த இயல்பு நாளுக்கு நாள் புதுப்பிக்கப்பெற்று வருகிறது.
எனவே நாங்கள் மனம் தளருவதில்லை. நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை. அவை சிறிது காலம்தான் நீடிக்கும். ஆனால் அவை ஈடு இணையற்ற மாட்சியை விளைவிக்கின்றன. அம்மாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும். நாங்கள் காண்பவற்றையல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை; காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை.
நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்துபோனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனிதக் கையால் கட்டப்படாதது, நிலையானது என்பது நமக்குத் தெரியும் அல்லவா!
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 12: 31b-32
அல்லேலூயா, அல்லேலூயா!
”இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
No comments:
Post a Comment