ஜூன் 9 : முதல் வாசகம்
உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15
ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார். “உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.
“நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக் கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார். அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான்.
ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள்.
ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment