Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, January 25, 2025

சனவரி 26 : முதல் வாசகம் எஸ்ரா கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார். மக்களும் அதைப் புரிந்துகொண்டனர். நெகேமியா நூலிலிருந்து வாசகம் 8: 2-4a, 5-6, 8-10

 சனவரி 26  :  முதல் வாசகம்

எஸ்ரா கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார். மக்களும் அதைப் புரிந்துகொண்டனர்.

நெகேமியா நூலிலிருந்து வாசகம் 8: 2-4a, 5-6, 8-10


அந்நாள்களில்

ஏழாம் மாதம் முதல் நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார். தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி கொடுத்தனர்.

திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மரமேடையின் மேல் நின்றுகொண்டிருந்தார். எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி “ஆமென்! ஆமென்!” என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள்.

மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்துகொண்டனர். ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: “இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்” என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக் கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பி வையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment