பிப்ரவரி 28 : நற்செய்தி வாசகம்
கடவுள் இணைத்ததை, மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12
அக்காலத்தில் இயேசு புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம்போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார்.
பரிசேயர் அவரை அணுகி, ``கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?'' என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.
அவர் அவர்களிடம் மறுமொழியாக, ``மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?'' என்று கேட்டார்.
அவர்கள், ``மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்'' என்று கூறினார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், ``உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.
படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், `ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' என்றார்.
பின்னர் வீட்டில் இதைப்பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.
இயேசு அவர்களை நோக்கி, ``தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்'' என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment