பிப்ரவரி 28 : முதல் வாசகம்
நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 5-17
இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும்; பண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும். அனைவரோடும் நட்புடன் பழகு; ஆனால் ஆயிரத்தில் ஒருவரே உனக்கு ஆலோசகராய் இருக்கட்டும்.
ஆய்ந்து நட்புக்கொள்; நண்பரையும் விரைவில் நம்பிவிடாதே. தன்னலம் தேடும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.
பகைவர்களாய் மாறும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உங்கள் பிணக்கை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி, உனக்கு இழிவைக் கொண்டு வருவார்கள்.
உன்னுடன் விருந்துண்ணும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.
நீ நல்ல நிலையில் இருக்கும்போது, அவர்கள் உன் உயிருக்கு உயிரான நண்பர்களாய் இருப்பார்கள்; உன் பணியாளர்களை ஆட்டிப் படைப்பார்கள்; நீ தாழ்ந்துவிட்டால் உனக்கு எதிராய் அவர்கள் மாறுவார்கள்; உன் முகத்தில் விழிக்க மாட்டார்கள்.
உன் பகைவர்களிடமிருந்து விலகி நில்; உன் நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இரு. நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள்; இத்தகைய நண்பர்களைக் கண்டவர்கள் புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள்.
நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை; அவர்களது தகைமைக்கு அளவுகோல் இல்லை.
நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்; ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்.
ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்புப் பேணுவோர். அவர்களை அடுத்தவர்களும் அவர்களைப் போலவே இருப்பார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment