Tuesday, August 17, 2010
http://valpaiyan.blogspot.com/2010/08/blog-post_17.html
உமாசங்கர் நியாயமான அதிகாரி, அவர் மீது அரசு ஏவி இருக்கும் கொடூரத்தை நாம் கண்டும் காணாமலும் இருக்க வேண்டுமா? -- இந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டபோது எனக்குத் தோன்றிய பதில் - ஏன் பதிவர்களாகிய நாம் அனைவரும் இம்முறை நம் ஒட்டு மொத்த ஆதரவை அந்த அதிகாரிக்குத் தெரிவிக்கக் கூடாது. அப்படி நாம் ஏதும் செய்தாலும் அது எந்த அளவுக்கு அவருக்கு உதவும் என்பதை விடவும், ஓரளவாவது நாம் நம் கடமையைச் செய்தோம் என்ற நல்ல உணர்வு நமக்கு ஏற்படலாம். அதற்காகவாவது எனக்குத் தோன்றிய ஒன்றை உங்களிடம் கூறுகிறேன். சரியென்றால் ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு சின்ன காரியம் செய்வோம்.
இந்த அதிகாரி தவறான காரணங்களுக்காக அரசால் தண்டிக்கப்படுகிறார் என்ற எண்ணமுள்ள பதிவர்கள் அனைவரும் ஒன்றாக, ஒரே நாளில் --வருகின்ற வாரத்தில் ஒரு நாள் - புதன் / வியாழக் கிழமை -- நாலைந்து வரிகள் கொண்ட ஒரே ஒரு இடுகையை அவரவர்கள் பதிவில் இடுவோம். அந்த ஒரு நாளில் ஒரே மாதிரியான இடுகைகள் இட்டு நம் ஒற்றுமையான உணர்வை அரசுக்குத் தெரிவிப்போம்.
இதனால் என்ன பயன் என்று கேட்பீரின், என்ன பயன் கிடைக்குமென்று தெரியாது. ஆனால் முழு இணையப் பதிவுலகமே ஒரு மனிதனின் பின்னால் நின்றால் அது அந்த மனிதனுக்கு நிச்சயம் தேவையான மன வலுவைத் தரும். அரசும் சிந்திக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.
ஒருவேளை நான் ஒரு எதிர்க்கட்சிக்காரன், அதற்காக இந்த முயற்சி என்று யாரேனும் நினைத்தால் அவர்களுக்கு ஒரு வார்த்தை: அந்தக் கட்சி, அதன் தலைவர்கள் எதுவுமே என் மரியாதைக்குரியதல்ல. கனவில் கூட நான் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் என்ற உறுதி எனக்கு எப்போதும் உண்டு.
இது நிச்சயமாக நியாயம் செத்து வரும் வேளையில் ஒரு தனி மனிதன் பல எதிரப்புகளையும் தாங்கி நியாயத்தின் பக்கம் நிற்கிறானே, அவனுக்கு நம்மாலான எளிய இந்த உதவியைச் செய்வோமே என்ற ஒரே எண்ணம்தான்.
வாருங்கள் ... ஒன்றுபட்டு நின்று நாம் நினைப்பதைச் செயலில் காட்டுவோம். இத்தனை பதிவர்கள் ஒன்றிணைந்தால் நல்லது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு ஒன்றிணைவோம். வாருங்கள் ....
பி.கு.
1.
அவ்வாறு இடுகையிட சம்மதிப்பின், யாராவது நல்ல நான்கு வரிகள் தயார் செய்து அளித்தால் அதை அனைவருமே ஒட்டு மொத்தமாக ஒன்று போல் இடுகையிடலாம்.
2. //கார்த்திகைப் பாண்டியன் said... புதன்கிழமை.. எல்லாருமே செய்யலாம் ஐயா..// அப்படியானால், எல்லோரும் புதன் கிழமை ஒன்றுபோல் இப்பதிவை இடுவோம்.
3. கா.பா. போன்ற பதிவர்கள் இதை மறுபதிப்பாக இட்டால் இன்னும் பலரின் கண்களுக்குப் போய்ச் சேரும். Please ... மறு பதிப்புகள் வரவேற்கப்படுகின்றன.
4. பால், சாதி, சமயம், இருக்குமிடம் எந்த வேறுபாடுமின்றி இதில் ஒன்றுபடுவோமே ...
5. நண்பர்களுக்கும் இச்செய்தியை இட்டுச் செல்லுங்கள். ஒன்றாக இடுகை இட உதவுங்கள்.
6.ஒட்டு மொத்தக்குரல் அரசை அடையும்
Subscribe to:
Posts (Atom)