Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, February 18, 2021

பிப்ரவரி 19 : முதல் வாசகம்உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ நாம் விரும்பும் நோன்பு!இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 1-9a

பிப்ரவரி 19 :  முதல் வாசகம்

உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ நாம் விரும்பும் நோன்பு!

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 1-9a
இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்:

பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே; எக்காளம் முழங்குவதுபோல் உன் குரலை உயர்த்து; என் மக்களுக்கு அவர்களின் வன்செயல்களையும், யாக்கோபின் குடும்பத்தாருக்கு அவர்களின் பாவத்தையும் எடுத்துக்கூறு. அவர்கள், நேர்மையானவற்றைச் செய்யும் மக்களினம்போலும், தங்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்போர் போலும் நாள்தோறும் என்னைத் தேடுகின்றார்கள்; என் நெறிமுறைகள் பற்றிய அறிவை நாடுகின்றார்கள்; நேர்மையான நீதித்தீர்ப்புகளை என்னிடம் வேண்டுகின்றார்கள்; கடவுளை அணுகிவர விழைகின்றார்கள். ‘நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக்கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்?’ என்கின்றார்கள்.

நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்; உங்கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள். இதோ, வழக்காடவும், வீண் சண்டையிடவும், கொடும் கையால் தாக்கவுமே நீங்கள் நோன்பிருக்கிறீர்கள்! இன்றுபோல் நீங்கள் உண்ணா நோன்பிருந்தால் உங்கள் குரல் உன்னதத்தில் கேட்கப்படாது.

ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணா நோன்பின் நாளாகத் தெரிந்துகொள்வது? ஒருவன் நாணலைப்போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்?

கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!

அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் ‘இதோ! நான்’ என மறுமொழி தருவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment