ஜூலை 17 : முதல் வாசகம்
எகிப்து நாட்டினின்று இஸ்ரயேல் மக்களை வெளியேறச் செய்தபோது ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே!
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 37-42
அந்நாள்களில்
இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து சுக்கோத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர். இவர்களில் குழந்தைகள் தவிர நடந்து செல்லக்கூடிய ஆடவர் மட்டும் ஏறத்தாழ ஆறு லட்சம் பேர் ஆவர். மேலும் அவர்களோடு பல இனப் பெருந்திரளும், ஆட்டு மந்தை, மாட்டு மந்தை என்று பெருந் தொகையான கால்நடைகளும் புறப்பட்டுச் சென்றன. எகிப்திலிருந்து கொண்டு வந்த பிசைந்த மாவைக் கொண்டு அவர்கள் சுட்டது புளிப்பற்ற அப்பங்கள். ஏனெனில் மாவு இன்னும் புளிக்காமல் இருந்தது. அவர்கள் எகிப்திலிருந்து துரத்தப்பட்டதாலும், சற்றும் தாமதம் செய்ய இயலாமற் போனதாலும் தங்களுக்கென வழியுணவு தயாரித்து வைத்திருக்கவில்லை!
எகிப்தில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள் அங்கு வாழ்ந்த காலம் நானூற்று முப்பது ஆண்டுகள்! நானூற்று முப்பதாம் ஆண்டு முடிவு பெற்ற அதே நாளில் ஆண்டவரின் படைத்திரள் எல்லாம் எகிப்து நாட்டினின்று வெளியேறியது. எகிப்து நாட்டினின்று அவர்களை வெளியேறச் செய்தபோது ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே! தலைமுறை தோறும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஆண்டவருக்கென்று திருவிழிப்பு கொண்டாட வேண்டிய இரவும் இதுவே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment