ஜூன் 7 : முதல் வாசகம்
நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளோம்; மற்றவர்க்கு ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-7.
கொரிந்து நகரில் உள்ள கடவுளின் திருச்சபைக்கும் அக்காயா மாநிலம் முழுவதிலும் வாழும் இறைமக்கள் அனைவருக்கும் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாயிருக்கும் பவுலும் சகோதரராகிய திமொத்தேயுவும் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று; அவரைப் போற்றுவோம். கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது.
கிறிஸ்து நமக்காக மிகுதியாகத் துன்புற்றார்; அதுபோல அவர் வழியாக நாம் மிகுதியான ஆறுதலும் பெறுகிறோம். ஆகவே நாங்கள் துன்புறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவும் மீட்புக்காகவும்தான்; நாங்கள் ஆறுதல் பெறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவே. நாங்கள் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதைப் போல நீங்களும் உங்கள் துன்பங்களைத் தளரா மனத்துடன் பொறுத்துக் கொள்வதற்கு இந்த ஆறுதல் ஆற்றல் அளிக்கிறது. நீங்கள் எங்கள் துன்பத்தில் பங்கெடுத்ததைப்போல் எங்களுடைய ஆறுதலிலும் பங்குபெறுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் இவ்வாறு செய்வீர்கள் என உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment