செப்டம்பர் 6 : முதல் வாசகம்
இறைவார்த்தை ஊழிஊழியாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 24- 2: 3.
சகோதரர் சகோதரிகளே,
இப்பொழுது, உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். என்மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன்.
நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலை முறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களினங்கள் இடையே அது அளவற்ற மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்கக் கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார். கிறிஸ்துவைப் பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சி நிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம். இதற்காகவே வல்லமையோடு என்னுள் செயல்படும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப வருந்திப் பாடுபட்டு உழைக்கிறேன்.
உங்களுக்காகவும் இலவோதிக்கேயா நகர மக்களுக்காகவும் என்னை நேரில் பார்த்திராத மற்ற அனைவருக்காகவும் நான் மிகவும் வருந்தி உழைக்கிறேன். இதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். என் உழைப்பால் உள்ளங்கள் யாவும் ஊக்கமடைந்து அனைவரும் அன்பினால் ஒன்றாக இணைக்கப்படவேண்டும்; இவ்வாறு கடவுளுடைய மறைபொருளாகிய கிறிஸ்துவை யாவரும் அறிந்துணர வேண்டும்; அந்த அறிவுத் திறனால் உறுதியான நம்பிக்கையை அவர்கள் நிறைவாகப் பெறவேண்டும். இதுவே என் விருப்பம். ஞானமும் அறிவுமாகிய செல்வங்கள் அனைத்தும் கிறிஸ்துவில் மறைந்துள்ளன.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment