ஏப்ரல் 23 : முதல் வாசகம்
நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21
அந்நாள்களில்
பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப் படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்துகொண்டனர். நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள். “நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக்கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்” என்று கூறினார்கள்.
அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது” என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர். அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்றனர். அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment