ஜூன் 10 : முதல் வாசகம்
மலைமேல் ஆண்டவர் திருமுன் வந்து நில்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 9a, 11-16
அந்நாள்களில்
எலியா அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவர், “வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்ல இருக்கிறேன்” என்றார்.
உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது.
அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, “எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது. அதற்கு அவர், “படைகளின் கடவுளாகிய ஆண்டவர்மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறிவிட்டனர்; உம் பலி பீடங்களைத் தகர்த்து விட்டனர்; உம் இறைவாக்கினரை வாளால் கொன்று விட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர்” என்றார்.
அப்போது ஆண்டவர் அவரிடம், “நீ வந்த வழியே திரும்பித் தமஸ்குப் பாலைநிலம் நோக்கிச் செல். அவ்விடத்தை அடைந்தவுடன் அசாவேலைச் சிரியாவுக்கு மன்னனாகத் திருப்பொழிவு செய். நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசனாகத் திருப்பொழிவு செய். ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment