ஜூன் 12 : மூவொரு கடவுள் பெருவிழா
முதல் வாசகம்
பூவுலகு உண்டாகும் முன்னே, ஞானம் நிலைநிறுத்தப் பெற்றது.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 8: 22-31
இறைவனின் ஞானம் கூறுவது: ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே, தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப் படைத்தார்.
தொடக்கத்தில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன். அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல் மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன்.
வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது, நான் அங்கே இருந்தேன். உலகத்தில் மேகங்களை அவர் அமைத்தபோது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன். அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி, அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது, நான் அவர்அருகில் அவருடைய சிற்பியாய் இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment