ஜூலை 16 : முதல் வாசகம்
வயல்வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்.
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 2: 1-5
தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து தீச்செயல் புரியத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் தங்கள் கை வலிமையினால் அவர்கள் அதைச் செய்து முடிக்கின்றார்கள். வயல்வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்; வீடுகள்மேல் இச்சை கொண்டு அவற்றைக் கைப்பற்றிக் கொள்கின்றார்கள்; ஆண்களை ஒடுக்கி, அவர்கள் வீட்டையும் உரிமைச் சொத்தையும் பறிமுதல் செய்கின்றார்கள்.
ஆதலால் ஆண்டவர் கூறுவது இதுவே: இந்த இனத்தாருக்கு எதிராகத் தீமை செய்யத் திட்டமிடுகிறேன்; அதனின்று உங்கள் தலையை விடுவிக்க உங்களால் இயலாது; நீங்கள் ஆணவம் கொண்டு நடக்க மாட்டீர்கள்; ஏனெனில் காலம் தீயதாய் இருக்கும். அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி இரங்கற்பா இயற்றி, ‘அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே; ஆண்டவருடைய மக்களின் உரிமைச் சொத்து கைமாறி விட்டதே! நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக் கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றாரே!’ என்று ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.
ஆதலால், நூல் பிடித்துப் பாகம் பிரித்து உங்களுக்குத் தருபவன் எவனும் ஆண்டவரின் சபையில் இரான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment