ஆகஸ்ட் 5 : முதல் வாசகம்
இரத்தக் கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு!
இறைவாக்கினர் நாகூம் நூலிலிருந்து வாசகம் 1: 15; 2: 2; 3: 1-3, 6-7
‘வெற்றி! வெற்றி!’ என்று முழங்கி நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் தென்படுகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு! உன் பொருத்தனைகளை நிறைவேற்று! ஏனெனில், தீயவன் உன் நடுவில் இனி வரவே மாட்டான்; அவன் முற்றிலும் அழிந்துவிட்டான்.
இஸ்ரயேலின் மேன்மை போலவே யாக்கோபின் மேன்மையை ஆண்டவர் மீண்டும் நிலைநாட்டுகின்றார்; கொள்ளைக்காரர்கள் அவர்களைக் கொள்ளையடித்தனர்; அவர்களின் திராட்சைக் கொடிகளையும் அழித்துப் போட்டனர்.
இரத்தக் கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு! அங்கு நிறைந்திருப்பது எல்லாம் பொய்களும் கொள்ளைப் பொருளுமே! சூறையாடலுக்கு முடிவே இல்லை! சாட்டையடிகளின் ஓசை! சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி! தாவிப் பாயும் புரவிகள்! உருண்டோடும் தேர்கள்! குதிரை வீரர்கள் பாய்ந்து தாக்குகின்றனர்; வாள் மின்னுகின்றது; ஈட்டி பளபளக்கின்றது; வெட்டுண்டவர்கள் கூட்டமாய்க் கிடக்கின்றனர்; பிணங்கள் குவிந்து கிடக்கின்றன; செத்தவர்களுக்குக் கணக்கே இல்லை; அந்தப் பிணங்கள் மேல் மனிதர் இடறி விழுகின்றனர்.
அருவருப்பானவற்றை உன்மீது எறிவேன்; உன்னை இகழ்ச்சியுடன் நடத்திப் பகடிப் பொருள் ஆக்குவேன். உன்னை நோக்குவோர் எல்லாரும் உன்னிடமிருந்து பின்வாங்கி, ‘நினிவே பாழாய்ப் போனது; அவளுக்காகப் புலம்புவோர் யாரேனும் உண்டோ?’ என்று சொல்வார்கள்; உன்னைத் தேற்றுவோரை எங்கே தேடுவேன்?
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment